கொரோனா வைரஸ் கோவிட்-19 தொற்று ஏற்பட்டால் அதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பது நமக்கு இப்போது நன்றாகத் தெரியும்.
ஆனால் எவ்வித அறிகுறிகளும் இல்லாதநிலையில் அதாவது asymptomatic நிலையில் உலகளாவிய ரீதியில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து எமக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமைக்கான அறிகுறிகள் காணப்படாவிட்டாலும் நாம் இதற்கான சோதனையைச் செய்துகொள்ளவேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அறிகுறிகளில்லாத -ஏசிம்ப்டமாட்டிக் நிலை என்றால் என்ன?
பாதிக்கப்பட்ட நபரிடம் ஆரம்ப கட்டடத்தில் முழுமையான அறிகுறிகள் தென்படாது. ஆனால் நோய் தொற்று கிருமி அவரது உடலில் இருக்கும். ஒரு சிலசமயம், ஏசிம்ப்டமாட்டிக் நபரிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்து, அதேநேரம், அவரது மரபணுவில் நோய் தொற்றை எதிர்க்கும் வீரியம் இருந்தால், அந்த நபருக்கு பாதிப்பு குறைவாக இருக்கவும் வாய்ப்புள்ளது.
ஏசிம்ப்டமாட்டிக் நிலை தொடர்பில் நிபுணர்களின் கருத்து என்ன?
இவ்விடயம் தொடர்பில் கருத்துவெளியிட்டுள்ள, Kirby Institute, Biosecurity Program பேராசிரியர் Raina MacIntryre- அறிகுறிகள் எதுவுமில்லாமல் கொரோனா தொற்று ஒருவருக்கு ஏற்படலாம் என்பது பொதுவான ஒன்றாகும் என கூறியுள்ளார்.
மேலும் அறிகுறிகளில்லாத நபர் ஏனையவர்களுக்கு கொரோனா தொற்றை பரவவிடக்கூடிய சூழல் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே கொரோனா தொற்று ஏற்பட்ட இடங்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள், அறிகுறிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கொரோனா சோதனை செய்துபார்ப்பது அவசியம் என பேராசிரியர் Raina MacIntryre வலியுறுத்தியுள்ளார்.
தமக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பது அறிகுறிகளற்ற நிலையில் இருப்பவர்களுக்குத் தெரியாது. எனவே அவர்கள் தம்மை தனிமைப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் தொடர்பிலான நிபுணர் சஞ்சய சேனாநாயக்க, இவ்வாறானவர்களிடமிருந்து எந்தளவில் தொற்று ஏனையவர்களுக்கு பரவுகிறது என்பது குறித்த போதிய தரவுகளோ ஆய்வுகளோ மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எதுஎப்படியிருப்பினும் அறிகுறிகளற்ற நிலையில் காணப்படும் கொரோனா தொற்றுதொடர்பில் மேலதிக ஆய்வுகள் நடத்தப்படுவது எதிர்காலத்தில் கொரோனா பரவலின் தாக்கம் எப்படி இருக்கப்போகிறது என்பதைத் தீர்மானிப்பதற்கு பேருதவி புரியும் என Walter and Eliza Hall Institute, epidemiologist பேராசிரியர் Ivo Mueller தெரிவித்துள்ளார்.
கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களிடம் மாத்திரம் சோதனைகளை மேற்கொள்ளும் நாடுகள் அறிகுறிகளற்ற நிலையிலுள்ள தொற்றாளர்களை தவறவிடக்கூடிய சூழல் காணப்படுவதால் அந்நாடுகள் பெரும் சிக்கலை எதிர்கொள்ளும் நிலை எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் அறிகுறியற்ற நிலையில் உள்ளவர்களிடமிருந்து ஏனையவர்களுக்கு எந்தளவில் தொற்று கடத்தப்படுகிறது என்பது குறித்த மேலதிக ஆய்வுகள் துரிதகதியில் நடத்தப்படுவது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.