ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் இந்தியாவின் 2 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தடை?

சில ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்கல்லூரிகள், வட இந்திய மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலிருந்து புதிய மாணவர் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கு தற்காலிகமாகத் தடைவிதித்துள்ளன.

2023-03-29_16-24-26.jpg

Australian universities block international student visa applications from Punjab and Haryana states in north India. Source: Supplied

வட இந்தியாவில் உள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து வரும் மாணவர் விண்ணப்பங்களை, சில ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் தற்காலிகமாக தடை செய்துள்ளமை, ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று என பல தரப்புக்களிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

மாணவர் விசா விண்ணப்பங்களை முழுமையாக தாக்கல் செய்யாமை, மற்றும் மோசடியான தகவல்கள் மற்றும் ஆவணங்களை வழங்குவது அதிகரித்துள்ளதாகத் தெரிவித்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து வரும் மாணவர் விசா விண்ணப்பங்களை உள்துறை அமைச்சு நிராகரிக்கும்போக்கு அதிகரித்துள்ளதையடுத்து, சில பல்கலைக்கழகங்கள் இத்தற்காலிக தடையை கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது.

மெல்பனை தளமாகக் கொண்ட Torrens பல்கலைக்கழகம், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இருந்து எந்த நேரடி விண்ணப்பங்களையும் தற்போது ஏற்றுக்கொள்வதில்லை என தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள தமது முகவர்களால் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை மட்டுமே தாம் பரிசீலிப்பதாக, குறித்த பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் SBS Punjabi-இடம் கூறினார்.

இது ஒரு நியாயமான அணுகுமுறை எனவும், இந்த பிராந்தியங்களில் இருந்து மாணவர்கள் விண்ணப்பித்து அவர்களின் விசாக்கள் நிராகரிக்கப்பட்டால், எதிர்கால விசா விண்ணப்பங்கள் பாதிக்கப்படலாம் எனவும், குறித்த மாநிலங்களிலிருந்துவரும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதன் மூலம், மாணவர்களுக்கு நீண்டகால அபாயங்களைக் குறைக்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், மேற்கு ஆஸ்திரேலியாவின் Edith Cowan பல்கலைக்கழகம், பிப்ரவரி 15 அன்று தனது முகவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், அனைத்து இளங்கலைப் படிப்புகளுக்கும், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இருந்து மாணவர் சேர்க்கையை தற்காலிகமாக நிறுத்திவிட்டதாகத் தெரிவிக்கும் மின்னஞ்சல், SBS Punjabi-இன் பார்வைக்குக் கிடைத்துள்ளது.

இந்த மாநிலங்களிலிருந்து வரும் விசா விண்ணப்பங்கள் அதிகளவில் நிராகரிக்கப்படுகின்றமை மற்றும் மாணவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்து எழுப்பப்பட்ட கவலைகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க விரும்புவதாகவும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் SBS Punjabi கேள்வி எழுப்பியபோது Edith Cowanஇன் துணைத் துணைவேந்தர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

பஞ்சாபின் லூதியானாவைச் சேர்ந்த கரந்தீப் சிங் என்ற மாணவர், அடிலெய்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில், தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடரவென, 9 ஜனவரி 2023 அன்று மாணவர் விசாவிற்கு விண்ணப்பித்தார்.

அவர் தனது 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் 95 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்த அதேநேரம், IELTSஇல் மொத்தம் ஏழு bands பெற்ற பின்னரே மாணவர் விசாவிற்கு விண்ணப்பித்திருந்தார்.

ஆனால் சில வாரங்களுக்கு முன்னர் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதையடுத்து, அவரது ஆஸ்திரேலிய கனவு தடைப்பட்டது. தற்போது வேறு நாடுகளில் தனது மேற்படிப்பைத் தொடர அவர் திட்டமிட்டுள்ளார்.

இப்படியாக விசா நிராகரிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதாக குடிவரவு முகவர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

Study gap, financial capacity மற்றும் ஆங்கில மொழித் திறமை குறித்து போலி ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் போக்கு, குறிப்பிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மத்தியில் அதிகம் காணப்பட்டமையே இதற்கான முக்கிய காரணம் எனவும், தமது நற்பெயர் மற்றும் தரவரிசை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக விசா நிராகரிப்பு அதிகம் காணப்படும் மாநிலங்களிலிருந்து வரும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள பல்கலைக்கழங்கங்கள் தயங்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் சிலவற்றின் இந்தப் போக்கு காரணமாக, உண்மையிலேயே தகுதிவாய்ந்த மாணவர்களும் பாதிக்கப்படுவதாகவும், இத்தடையை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் நீக்க வேண்டுமெனவும் பல்வேறு தரப்புக்களிலிருந்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 29 March 2023 4:29pm
Updated 29 March 2023 5:43pm
Source: SBS

Share this with family and friends