மெல்பேர்னில் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஹோட்டலில் பணிபுரிந்த ஒருவருக்கு(பாதுகாப்பு பணியாளர் என நம்பப்படுகிறது) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அங்குள்ளவர்கள் கடும் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
நவுறு மற்றும் மனுஸ் தீவிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 60 புகலிடக்கோரிக்கையாளர்கள் குறித்த ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பணியாளர் ஊடாக அங்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அங்குள்ள எல்லோரும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை இருப்பதாகவும், கப்பல் ஒன்றுக்குள் தொற்று ஏற்பட்டநிலை போன்றதாகவே இதுவும் இருக்கும் எனத் தாம் அஞ்சுவதாகவும் அங்குள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொற்றுநோயிலிருந்து ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளாக அரசு அறிவித்திருக்கும் படிமுறைகளைக் கடைப்பிடிப்பது அந்த ஹோட்டலில் சாத்தியமில்லை என்றும் அங்கு வழங்கப்படுகின்ற வசதிகள் எதுவும் நோய்க்கால தயார் நிலைக்கு போதுமானது அல்ல என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில் கருத்துவெளியிட்டுள்ள உள்துறை அமைச்சு, குறித்த பணியாளருக்கு ஜுலை 8ம் திகதி COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் ஆனால் அவர் ஜுலை 4 முதலே வேலைக்கு சமூகமளித்திருக்கவில்லை என்றும் கூறியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பணியாளர் அங்குள்ள எவருடனும் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக இனங்காணப்படவில்லை எனவும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஹோட்டலில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அங்குள்ளவர்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என்று அகதிகள் நல அமைப்புக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளன.
இதேவேளை விக்டோரியாவில் இன்று புதிதாக 177 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக மாநில Premier Daniel Andrews தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.