புகலிடக்கோரிக்கையாளர் குடும்பமொன்றுக்கு ஆஸ்திரேலிய அரசு நஷ்டஈடு!

 Christmas Island Detention Centre

Source: Getty Image

ஈரான் பின்னணி கொண்ட புகலிடக்கோரிக்கையாளர் குடும்பம் ஒன்றுக்கு ஆகக்குறைந்தது ஒரு லட்சம் டொலர்களை ஆஸ்திரேலிய அரசு நஷ்டஈடாக வழங்கியுள்ளது.

குறித்த குடும்பம் ஆஸ்திரேலிய குடிவரவு தடுப்பு முகாம்களில் இருந்தபோது நடத்தப்பட்ட முறை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கினையடுத்து இத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

11 மற்றும் 16 வயதுப் பிள்ளைகள் மற்றும் அவர்களது தாயாருக்கே இத்தொகை வழங்கப்படுவதற்கான அனுமதி நியூசவுத் வேல்ஸ் நீதிமன்றால் வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி ஒரு பிள்ளைக்கு ஐம்பதாயிரம் டொலர்களும் தாயாருக்கு ஐம்பதாயிரம் டொலர்களும் மற்றைய பிள்ளைக்கு கணிசமானதொரு தொகையும் என மொத்தமாக சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொகை இக்குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அரசினால் நிர்வகிக்கப்படும் தடுப்பு முகாம்களில் இவர்கள் அனுபவித்த மற்றும் பார்த்த அதிர்ச்சிகரமான சம்பவங்களுக்காக நஷ்டஈடு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கினையடுத்து அரசு இத்தொகையினை வழங்குவதற்கான இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2010ம் ஆண்டு புகலிடம் கோரி ஈரானிலிருந்து வந்த இக்குடும்பம் 2010-2011 வரையான காலப்பகுதியில் கிறிஸ்மஸ் தீவு, Asti Motel , Northern Territory   மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவின் Inverbrackie Detention Centre ஆகியவற்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.





Share
Published 12 December 2018 1:58pm
Updated 12 December 2018 2:00pm
Presented by Renuka


Share this with family and friends