ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான நடைமுறை இன்னும் கடினமாகிறது?

Visa

Source: Supplied

ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடம் பெறுவதற்கான விசா நடைமுறையை அரசு இன்னமும் இறுக்கமாக்கலாம் என குடியுரிமை தொடர்பான அமைச்சர் Alan Tudge மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குள் வரமுன்னரேயே பலருக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்துவிடுவதாகத் தெரிவித்துள்ள அவர் இதுதொடர்பில் மேலதிகமாக ஆலோசிக்கவேண்டியுள்ளதுடன், ஒருவருக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்க முதல், அவர் ஆஸ்திரேலிய விழுமியங்களை அறிந்துகொள்ளும்வகையில் பரீட்சைக்கு முகங்கொடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.

தற்போதைய நடைமுறையின்படி ஆஸ்திரேலியாவில் சில வருடங்கள் வாழ்ந்தபின்னர் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படும் வகையில் ஒருபகுதி விசாக்கள் அமைந்துள்ளன. ஆனால் மீதி விசாக்கள் ஊடாக ஆஸ்திரேலியாவுக்குள் வரமுதலே நிரந்தரவதிவிட உரிமையைப் பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான வழிகளாக Skilled Migration விசா மூன்றில் இரண்டு பாகமாகவும், பெற்றோர், மனைவி,பிள்ளைகளுக்கான குடும்ப விசாக்கள் மூன்றில் ஒரு பாகமாகவும் காணப்படுகின்றன.

இந்தப் பின்னணியில் ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு முன்னரேயே நிரந்தர வதிவிடம் பெறுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், விசா நடைமுறைகளில் அரசு மேலும் இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை வருடமொன்றுக்கு 190,000 பேர் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான அனுமதி வழங்கப்படும் நிலையில், கடந்த ஆண்டு 162,000 பேருக்கே இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Share

Published

Updated

Presented by Renuka

Share this with family and friends