ஆஸ்திரேலியாவில் அகதிபெண்களுக்கு குழந்தைகள் இறந்து பிறப்பதற்கான காரணம் என்ன?

The feet of a new baby wrapped in a blanket.

Source: AAP

ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த மற்றும் அகதிப்பின்னணி கொண்ட பெண்களுக்கு ஏற்படும் கருக்கலைவு மற்றும் குழந்தைகள் இறந்து பிறத்தல் ஆகியவற்றுக்கு அவர்களிடையே காணப்படுகின்ற மொழிப்பிரச்சினைதான் பிரதானமானது என்று Medical Journal of Australia தெரிவித்துள்ளது.

மேலும் அகதிப் பின்னணிகொண்ட பெண்களின் வாழ்க்கை சித்திரவதை மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றுடனும் தொடர்புடையதாக இருக்கும்போது கர்ப்பகாலம் மிகக்கடினமானதாக காணப்படுவதும் இன்னொரு பொதுவான பிரச்சினையாகியுள்ளது என்று Medical Journal of Australia சுட்டிக்காட்டியுள்ளது.

ஆசிய நாடுகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு  வந்துள்ள பெண்களுக்கு இயல்பாகவே கர்ப்பகாலம் நீண்டதாக காணப்படுகிறது. ஆக, கரு உருவாகும் காலமும் நீண்டது. இது அவர்களது உயிரியல் பின்னணியுடன் சம்பந்தப்பட்டது. ஆகவே, இந்த காலப்பகுதியில் அவர்கள் தங்களுக்குரிய தேவைகளை தெளிவாக கேட்கவும் அவர்களுக்குரிய வசதிகளை புரியவைக்கவும் மொழி அத்தியாவசியமானதாகும்.

கர்ப்பிணிப்பெண்கள் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு பாதகம் ஏற்படாமல் தூங்குவது உட்பட கர்ப்ப கால உணவுகள் முதல் கர்ப்பகால புகைத்தல் பழக்கம் போன்ற விடயங்களை அவர்களுக்கு தெளிவாக விளங்கப்படுவதற்கு ஆஸ்திரேலியாவில் எத்தனையோ சேவைகள் உள்ளன. ஆனால், அவற்றை ஆங்கிலம் அல்லாத மொழிப்பாவனை உடையவர்களுக்கு புரியவைப்பதுதான் இங்கு பெரும் சிக்கலாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் வருடமொன்றுக்கு ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டிராத சுமார் 80 ஆயிரம் பெண்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால், குழந்தைகள் இறந்து பிறப்பது என்பது இன்னமும் தொடர்கதையாகவே காணப்படுகிறது என்று Medical Journal of Australia சுட்டிக்காட்டியுள்ளது.

புலம்பெயர்ந்த மற்றும் அகதிப் பின்னணி கொண்ட பெண்கள் மத்தியில் நிலவும் மொழிப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் மூலம் கருக்கலைவு மற்றும் குழந்தைகள் இறந்து பிறத்தல் ஆகியவற்றை இயன்றவரை தடுக்க முடியும் என இவ்வாய்வு சுட்டிக்காட்டியுள்ளது.


Share

Published

Updated

Presented by Renuka

Share this with family and friends