ஆஸ்திரேலியாவுக்கான புதிய 3 வகை விசாக்கள் அறிமுகம்!

Australian Visa

New skilled occupation list announced Source: SBS

ஆஸ்திரேலியாவிலுள்ள புலம்பெயர் சமூகத்தினருக்கு பயன்தரும்வகையிலான புதிய 3 விசா பிரிவுகளை ஆஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

புலம்பெயர் சமூகத்தினர் நீண்டநாட்களாக விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இப்புதிய 3 வகை விசாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் David Coleman தெரிவித்துள்ளார்.

இம்மூன்று புதிய விசாக்களில் முதலாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தற்காலிக பெற்றோர் விசாவாகும்.

எதிர்வரும் ஏப்ரல் 17ம் திகதி முதல் தமது பெற்றோருக்கான விசா விண்ணப்பங்களை பிள்ளைகள் தாக்கல் செய்யலாம்.

Sponsored Parent (Temporary) subclass 870 பிரிவில் ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்கள் தமது பெற்றோரை 3 வருடங்களுக்கு வரவழைப்பதற்கு 5000 டொலர்களைச் செலுத்த வேண்டும். அதேபோன்று 5 வருட விசாவுக்கு 10,000 டொலர்கள் செலுத்த வேண்டும். மேலதிகமாக 10,000 டொலர்கள் செலுத்துவதன் மூலம் மேலும் 5 வருடங்களால் இந்த விசாவை நீடித்துக்கொள்ள முடியும். ஆனால் அவர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாகக் குடியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மேலும் medicare உட்பட அரசின் எந்தவொரு நலன்புரி சேவைகளும் தற்காலிக பெற்றோர் விசாவில் வருபவர்களுக்கு வழங்கப்படமாட்டாது. இந்த விசாவில் வருபவர்கள் தனியார் மருத்துவக் காப்பீடு பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஆஸ்திரேலியாவில் அவர்களுக்கு ஏற்படுகின்ற எந்தவொரு கூடுதல் சுகாதார செலவினங்களுக்கும் அவர்களது பிள்ளைகள் நிதி உத்தரவாதம் அளிக்கவேண்டும்.

அடுத்ததாக சமய சம்பந்தமான வேலைக்கென வெளிநாடுகளிலிருந்து ஆட்களை வரவழைப்பதை இலகுவாக்கும் வகையில் புதிதாக Minister of Religion Labour ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி "Religious Assistant" என்ற புதிய தொழில் Minister of Religion Labour ஒப்பந்தத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டு இதனூடாக மத அமைப்புக்கள் வெளிநாடுகளிலிருந்து ஆட்களை வரவழைப்பது இலகுவாக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று aged care-முதியோர் பராமரிப்பு சேவை வழங்குனர்கள் வெளிநாடுகளிலிருந்து தகுதிவாய்ந்த பணியாளர்களை வரவழைப்பதற்கான புதிய விசா ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பல்கலாச்சார பின்னணிகொண்ட முதியவர்களைப் பராமரிப்பதில் அந்தந்த பின்னணி கொண்ட பராமரிப்பாளர்கள் தேவை என நீண்டநாட்களாக வலியுறுத்தப்பட்டுவந்த நிலையில், இப்புதிய விசா பிரிவின்கீழ் அந்தந்த மொழிபேசும் தகுதிவாய்ந்த பராமரிப்பாளர்களை வரவழைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.




Share

Published

Presented by Renuka

Share this with family and friends